கோயம்பேடு மார்க்கெட்டில் தீ விபத்து - ₹20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) சென்னையின் முக்கிய வர்த்தக மையமான கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் மணி என்பவருக்கு சொந்தமான மொத்த மளிகை வியாபாரக் கடையில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
Fire


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னையின் முக்கிய வர்த்தக மையமான கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில் மணி என்பவருக்கு சொந்தமான மொத்த மளிகை வியாபாரக் கடையில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரமாக இருந்ததால், கடை மூடப்பட்டிருந்த நிலையில் தீ வேகமாக பரவி கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சூழ்ந்தது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை வீரர்கள் ஜே.ஜே.நகர் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்களில் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியிருந்தாலும், வீரர்களின் துரித நடவடிக்கையால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த தீ விபத்தில் சுமார் ₹20 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அரிசி மூட்டைகள், எண்ணெய் டின்கள், மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக நாசமாகியுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ