Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதில்,லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், மாசி வீதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டன.
பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதகராகவும், சிறிய தேரில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கீழமாசி, தெற்குமாசி, மேலமாசி, வடக்குமாசி ஆகிய நான்கு மாசி வீதிகளிலும் திருத்தேர்கள் பவனி வந்தன.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே தேரடி பகுதியில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கப்பட்டது. முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட யானை, பின்னர் விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்கள் சப்பரங்கள் வரிசையாக வந்தன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “ஹர ஹர சிவா” என பக்தி முழக்கங்களுடன் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சங்கு ஓசை, கைலாய வாசல் இசைகள், பக்திப் பாடல்கள் என பக்தி பரவசத்தில் விழா நடைபெற்றது.
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டதால், காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உயரமான கட்டிடங்களில் இருந்தும் பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.
இந்த ஆண்டில் புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டதால், தேரோட்டம் சுமார் 4 மணி நேரத்திற்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழாவின் இந்த திருத்தேரோட்டம் பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
Hindusthan Samachar / GOKILA arumugam