Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 29 ஏப்ரல் (ஹி.ச.)
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
மாநிலத்தின் உள்ளூர் மொழியான மராத்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளுடன் ஓட்டுநர்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, மகாராஷ்டிராவில் இயங்கும் அனைத்து ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களும் மராத்தி மொழியில் அடிப்படை அளவில் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, பயணிகளின் தேவைகளை புரிந்து கொள்ளவும், இடங்களைத் தெளிவாக அறிந்து சேவை வழங்கவும் மராத்தி அறிவு அவசியம் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறையை அமல்படுத்தும் பொருட்டு, மே 1 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக தனிப்பட்ட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களிடம் மராத்தி மொழித் திறனை பரிசோதிக்க உள்ளன.
மராத்தி மொழி தெரியாத அல்லது போதுமான அளவில் பேச இயலாத ஓட்டுநர்களுக்கு, பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) மூலம் சிறப்பு மொழிப் பயிற்சி வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஓட்டுநர்களுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்கு, மராத்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் போக்குவரத்து அலுவலரின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P