Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 29 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குடவாசல் பூவாம்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 42). இவர் திருநறையூர் மேலத்தெருவைச் சேர்ந்த சரண்யா (வயது 30) என்ற பெண்ணை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த நிலையில் இந்த தம்பதிக்கு இதுவரை குழந்தை இல்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை போட்டு பிரிந்த நிலையில், சரண்யா மேலத்தெருவில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்குச் சென்று அங்கு வசித்து வருகிறார். இதனிடையே செந்தில் ராஜ் அவ்வபோது தனது மனைவியை சென்று பார்ப்பதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு வந்த செந்தில் ராஜுக்கும் சரண்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், செந்தில்ராஜ் சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இருப்பினும், அவருக்கு ஆத்திரம் குறையாததால் மீண்டும் இரவு குடிபோதையில் அரிவாளுடன் மாமியார் வீட்டுக்கு வந்து மனைவி சரண்யாவை அரிவாள் கொண்டு வெட்டியுள்ளார்.
இதனை தடுக்க வந்த மாமியார் மாதவி மற்றும் சரண்யாவின் அக்கா மகள் பிரியங்கா
(வயது 19) ஆகியோரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடிபோதையில் இருந்த செந்தில்ராஜ் அரிவாளால் மூன்று பெண்களை வெட்டியதை பார்த்த பொதுமக்கள், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, நாச்சியார்கோவில் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், செந்தில்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN