60 வயதை நெருங்கும் கஸ்தூரி யானை, கோடை வெயிலை தணிக்க நீரில் ஆனந்த குளியல்
திண்டுக்கல், 29 ஏப்ரல் (ஹி.ச.) பழனியில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரி தனக்கெனப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது. 60 வயதை நெருங்கும் கஸ்தூரி யானை, தண்ணீரைப் பீய்ச்சி அடித
Kasthuri Elephant


திண்டுக்கல், 29 ஏப்ரல் (ஹி.ச.)

பழனியில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரி தனக்கெனப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது.

60 வயதை நெருங்கும் கஸ்தூரி யானை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாகமாக விளையாடியது காண்போரை ஈர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் யானை கஸ்தூரியின் வெப்பத்தைத் தணிக்கக் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, 8 வயதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட கஸ்தூரி யானை, தற்போது 60 வயதை நெருங்குகிறது.

தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கியத் திருவிழாக்களில் பங்கேற்கும் கஸ்தூரி, பழனி மக்களின் செல்லப் பிள்ளையாகத் திகழ்ந்து வருகிறது. தற்போது பெரியநாயகி அம்மன் கோவில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் கஸ்தூரி பராமரிக்கப்பட்டு வருகிறது.

பழனியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விலங்குகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரமடை தோட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பிரத்யேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. இன்று காலை அந்த நீச்சல் குளத்தில் இறங்கிய கஸ்தூரி, தண்ணீரில் மூழ்கியும், தும்பிக்கையால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

வெயிலின் கடுமையைக் குறைக்கக் கஸ்தூரி யானைக்குத் தற்போது தினமும் இருவேளை குளியல் வழங்கப்படுகிறது.

காலையில் சாதாரணக் குளியலும், நண்பகலில் நீச்சல் குளத்தில் உற்சாகக் குளியலும் பாகன்கள் கஸ்தூரியைப் பராமரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN