Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவில் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த எந்த அச்சமும் தேவையில்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தில் அதிகளவில் எரிபொருளை சேமித்து வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விநியோகச் சங்கிலி வழக்கம்போல சீராக செயல்பட்டு வருவதால், எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் அல்லது தேவையற்ற அச்சத்தால், சிலர் வழக்கத்தை விட அதிக அளவில் எரிபொருள் வாங்க முயற்சிக்கலாம். இதுபோன்ற ‘பேனிக் பையிங்’ நடவடிக்கைகள் தேவையற்ற சிரமங்களையும், தற்காலிக நெரிசலையும் உருவாக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களது வழக்கமான தேவைக்கேற்ப மட்டுமே எரிபொருளை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகமும் வழக்கம்போல நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி முன்பதிவு செய்த பின்னர், பொதுவாக ஐந்து நாட்களுக்குள் சிலிண்டர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், தற்போது காத்திருப்பு காலம் ஐந்து நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோ எல்பிஜி விநியோகமும் தடையின்றி நடைபெற்று வருகிறது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில், ஆட்டோ எல்பிஜி கிடைப்பை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
எரிபொருள் மற்றும் எல்பிஜி விநியோகம் முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற குவிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே நிலவும் சந்தேகங்களை நீக்கி, எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P