கிரேட் நிக்கோபாரில் வளர்ச்சி எனும் பெயரில் பேரழிவு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, 29 ஏப்ரல் (ஹி.ச.) கிரேட் நிக்கோபாரில் பகுதியில் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூ
Rahul Gandhi Alleges


புதுடெல்லி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

கிரேட் நிக்கோபாரில் பகுதியில் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

இன்று நான் கிரேட் நிக்கோபார் வழியாகப் பயணம் செய்தேன்.

என் வாழ்நாளில் நான் கண்டதிலேயே மிகவும் வியக்கத்தக்க காடுகள் இவைதான். நினைவுகளுக்கும் அப்பாற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள்; தலைமுறைகள் பல கடந்து வளர்ந்து நின்ற காடுகள் இவை.

அங்கே வசிக்கும் ஆதிவாசிச் சமூகத்தினர் ஆகட்டும், அல்லது குடியேறியவர்கள் ஆகட்டும் என இத்தீவில் வாழும் மக்களும் அதே அளவு அழகுடையவர்களே. ஆனால், அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றன.

இங்கே தான் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை அரசாங்கம் ஒரு திட்டம் (Project) என்று அழைக்கிறது. ஆனால் நான் நேரில் கண்டது ஒரு திட்டமல்ல. அது, கோடிக்கணக்கான மரங்கள் கோடாரியின் வெட்டுக்குக் குறிவைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியாகும்.

அது, 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஒரு அவலமாகும்.

அது, தங்கள் இருப்பிடங்கள் பறிக்கப்படும்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் துயரமாகும்.

இது வளர்ச்சியல்ல. இது, வளர்ச்சியின் மொழியைப் போர்த்திக்கொண்டு வரும் ஒரு பேரழிவே ஆகும்.

எனவே நான் இதைத் தெளிவாகக் கூறுகிறேன், தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பேன்.

கிரேட் நிக்கோபாரில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது, நம் வாழ்நாளில் இத்தேசத்தின் இயற்கை மற்றும் பழங்குடியினப் பாரம்பரியத்திற்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றும், மிகக் கொடிய குற்றங்களில் ஒன்றும் ஆகும்.

இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் இதைத் தடுத்து நிறுத்த முடியும். நான் கண்ட உண்மையை இந்திய மக்களும் காண முன்வந்தால் அது சாத்தியமே.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b