Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
நேற்று (28.04.2026) புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூர் தாலுகா நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் (20) மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
காதல் தொடர்பு காரணமாக சமூக மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.
சாதி வேறுபாடு என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவது, மனிதநேயத்திற்கும் சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூரமான செயலாகும். இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நடைபெறுவது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது.
இளைஞர்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேலும், இவ்வாறான சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கும் அரசுக்கும் உள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிஹரனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b