Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
மே தினம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 30/04/2026 (வியாழக்கிழமை), 01/05/2026 [மே தினம் - வெள்ளிகிழமை) 02/05/2026 (சனிக்கிழமை), மற்றும் 03/05/2026 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அன்று 475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 315 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை அன்று 85 பேருந்துகளும், வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை தலா 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தலா 14 பேருந்துகளும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணைய தளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b