Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல் ,29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 4 நாள் ஓய்வு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.
அவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக வழியனுப்பினர்.
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 25-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார்.
அங்கு பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.
கடந்த 2 நாட்களாக அவர் நட்சத்திர ஏரிச்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். பலர் பூங்கொத்துகள் வழங்கியும், சால்வைகள் அணிவித்தும், புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதில் ஒரு சிறுமி
“தி.மு.க. வெல்லட்டும்” என்ற பாடலை பாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு திடீரென சைக்கிள் சவாரியும் செய்தார்.
பின்னர் ஏரிச்சாலை அருகிலுள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்திய அவர், அங்குள்ள தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.
தனியார் ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவரை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அவர்கள் வணக்கம் தெரிவித்து, உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பினர்.
பின்னர் மதுரை விமான நிலையம் சென்ற முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதனிடையே, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA