Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் மதுபானக் கடைகளுக்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பெண்களின் அச்சத்தை போக்கும் வகையில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாகவும், அவை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடைகள் மூடிய பின்னரும் அருகிலுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ‘சந்து கடைகள்’ மூலம் மதுபானம் விற்பனை நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பெண்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், கிராம சபை கூட்டங்களில் கூட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அரசு அதனை பொருட்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக பெண்கள் கடைகளை சேதப்படுத்திய சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மே தினம் மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பெண்கள் போராட்டத்தின் பின்னணியில் குடும்பத்தினரை பாதுகாக்கும் அச்சமே முக்கிய காரணமாக உள்ளதாகக் குறிப்பிட்ட வேல்முருகன், இந்த எழுச்சியை அரசு அலட்சியப்படுத்தாமல், கள்ள வணிகத்தை கட்டுப்படுத்தி, படிப்படியாக மதுபானக் கடைகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ