Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 29 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்-இல் நடைபெற்று வரும் திரு அவதார உற்சவத்தின் போது, ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
வைணவ சமயத்தின் முக்கிய தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திரு அவதார உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய நிகழ்வில் ஸ்தோத்திரப் பாடல்களை பாடும் முறையும், முன்னுரிமையும் தொடர்பாக தாதாச்சாரி மரபைச் சேர்ந்த வடகலை பக்தர்களுக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆரம்பத்தில் வாய்த்தகராறாக தொடங்கிய இந்த விவகாரம், பின்னர் கருவறை முன்பே இரு தரப்பினரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலைக்கு சென்றது.
தங்களது மரபு, சம்பிரதாயம் மற்றும் வழிபாட்டு உரிமையை இரு தரப்பினரும் வலியுறுத்தியதால், கோவில் வளாகத்தில் பதற்றம் அதிகரித்தது.
உற்சவத்தை காண வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பும் கவலையும் நிலவிய நிலையில், தகவலறிந்து விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்ற வடகலை–தென்கலை பிரிவினருக்கிடையேயான கருத்து வேறுபாடுகள், குறிப்பாக வழிபாட்டு முறைகள் மற்றும் மரபுரிமைகள் தொடர்பாக, இக்கோவிலில் அவ்வப்போது எழுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது போலீசாரின் தலையீட்டால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam