Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 03 ஏப்ரல் (ஹி.ச.)
தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 460 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உட்கோட்ட வாரியாகப் பொருத்தப்பட்ட கேமராக்களின் விவரம்:
தூத்துக்குடி நகரம்: 58
தூத்துக்குடி ஊரகம்: 114
திருச்செந்தூர்: 52
சாத்தான்குளம்: 29
ஸ்ரீவைகுண்டம்: 59
மணியாச்சி: 24
கோவில்பட்டி: 73
விளாத்திகுளம்: 51
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரிகுடியிருப்பு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இன்று தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்தந்தப் பகுதி பொதுமக்களிடம் தேர்தலின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் திருச்செந்தூர் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், தேரிகுடியிருப்பு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b