பா.ஜ.க. தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் முரளீதரன் கட்சியில் இருந்து நீக்கம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை உள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் க
BJP Thanjavur


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை உள்ளது.

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறி தஞ்சை மாவட்ட பாஜக துணைத்தலைவர் முரளீதரன் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கட்சியின் தலைமை தனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த திங்கட்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதாவது அன்றைய தினம் அவரது ராசிக்கு நல்ல நாள் என்று கூறி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

அதோடு அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் முரளீதரன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஆர். முரளீதரன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது, எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகி ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியிருப்பது தஞ்சை மாவட்ட பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b