உஜ்ஜைன் மாணவர் குர்கிரத் சிங் மனோச்சாவின் உடல் கனடாவிலிருந்து மீட்கப்பட்டது - இறுதிச் சடங்கில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்பு
உஜ்ஜைன், 03 ஏப்ரல் (ஹி.ச.) மார்ச் 14 அன்று கனடாவில் உயிரிழந்த உஜ்ஜைனைச் சேர்ந்த மாணவர் குர்கிரத் சிங் மனோச்சாவின் உடல், சம்பவம் நடைபெற்றது முதல் சுமார் 21 நாட்கள் கடந்த நிலையில், இன்று காலை அவரது சொந்த நகரமான உஜ்ஜைனுக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட
உஜ்ஜைன் மாணவர் குர்கிரத் சிங் மனோச்சாவின் உடல் கனடாவிலிருந்து மீட்கப்பட்டது - இறுதிச் சடங்கில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்பு


உஜ்ஜைன், 03 ஏப்ரல் (ஹி.ச.)

மார்ச் 14 அன்று கனடாவில் உயிரிழந்த உஜ்ஜைனைச் சேர்ந்த மாணவர் குர்கிரத் சிங் மனோச்சாவின் உடல், சம்பவம் நடைபெற்றது முதல் சுமார் 21 நாட்கள் கடந்த நிலையில், இன்று காலை அவரது சொந்த நகரமான உஜ்ஜைனுக்கு கொண்டு வரப்பட்டது.

மாவட்டத்தின் பர்ஷ்வநாத் சிட்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இறுதி மரியாதை செலுத்த பொதுமக்கள் திரளாகக் கூடினர்.

அவர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அனில் ஃபிரோஜியா மற்றும் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தி, துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் யாதவ்,

மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்துடனும் இன்ப துன்பங்களில் பங்கேற்பது அரசின் கடமை. இக்கட்டான நேரத்தில், பெற்றோர் மிகுந்த துயரத்தில் இருந்தனர்.

வெளிநாட்டில் நடந்த சம்பவமாக இருப்பதால், உடலை மீட்கும் நடைமுறைகளில் பல சவால்கள் இருந்தன. இருந்தபோதிலும், இந்திய அரசின் ஒத்துழைப்புடன், மத்திய பிரதேச அரசு மனிதாபிமான அடிப்படையில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, இளைஞரின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. அவர் இறைவனடி சேர்ந்திருந்தாலும், எங்கள் மகன் வீடு திரும்பியிருக்கிறான் என்ற ஒரு வகை ஆறுதல் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

என்று கூறினார்.

முன்னதாக, குர்கிரத் சிங் உயர்கல்விக்காக கனடா சென்றிருந்தார். அங்குள்ள ‘ஃபோர்ட் செயின்ட் ஜான்’ பகுதியில், மாணவர்களுக்கிடையேயான தகராறு தொடர்ந்து, சில இளைஞர்கள் குழு அவரை கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் மார்ச் 14 அன்று அவர்மீது வாகனம் ஏற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு பரிசோதித்த மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவரது உடல் முதலில் நேற்று மாலை அகமதாபாத் விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தேவையான சுங்க மற்றும் ஆவணச் செயல்முறைகள் நிறைவு செய்யப்பட்டன. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உஜ்ஜைனுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை அவரது இல்லத்தை வந்தடைந்தது.

உடலைக் கண்டதும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். வீடு முழுவதும் துயர சூழல் நிலவியது. உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் அங்கு திரண்டு, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM