தவெக தேர்தல் பரப்புரையில் சிறுவர்களை பயன்படுத்தியதாக மேலும் ஒரு தவெக நிர்வாகி மீது வழக்கு பதிவு
பெரம்பலூர், 03 ஏப்ரல் (ஹி.ச) தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் த
Case filed against another TVK


பெரம்பலூர், 03 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தும் தமிழக வெற்றி கழக வேட்பாளராக ரேவதி முத்தமிழ்செல்வன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரேவதி குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் பகுதிகளில் அக்கட்சியின் நிர்வாகிகளைச் சந்திப்பதற்காகவும், வாக்கு சேகரிப்பதற்காகவும் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி (31.03.2026) சென்றுள்ளார்.

அச்சமயத்தில் அக்கட்சியின் கிழக்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மேந்திரன் என்பவர் தலைமையிலான நிர்வாகிகளை ரேவதி சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாத்தனூர் குடிகாடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிறுவர்களை வாக்கு சேகரிப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். அதோடு சிறுவர்கள் கட்சியின் பதாகைகளை ஏந்தியவாறு வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுச் செல்லக்கூடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை வட்டாட்சியர் சுதாகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் தர்மேந்திரன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

த.வெ.க. வேட்பாளரின் பிரச்சாரத்திற்காகச் சிறுவர்களைப் பயன்படுத்தியதாக அக்கட்சியின் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் ராமநாதபுரத்தில் சிறுவர்களை பயன்படுத்தி தவெக மாவட்ட செயலாளர் வாக்கு சேகர்ப்பில் ஈடுபட்ட வீடியோ 2 வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b