Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 03 ஏப்ரல் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தேவாலயத்தில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூலாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பிரார்த்தனை முடிந்ததும் வழக்கம்போல் தேவாலயத்தை பூட்டிவிட்டு பங்குதந்தை மற்றும் பணியாளர்கள் வீடு திரும்பினர். அதன் பின்னர் இரவு நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தேவாலயத்தை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தேவாலயத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், அங்கு இருந்த பல விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளது. குறிப்பாக இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆராதனைகளில் பயன்படுத்தப்படும் கீபோர்டுகள், ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கர் பெட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதனுடன் தேவாலயத்தில் இருந்த உண்டியல் பெட்டியை உடைத்து அதில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மொத்தமாக ரூ.1.60 லட்சம் மதிப்பிலான பொருட்களும் ரொக்கமும் இச்சம்பவத்தில் இழக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை தேவாலயத்துக்கு வந்த பங்குதந்தை மற்றும் ஊழியர்கள், ஜன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருடர்கள் எந்த வழியாக வந்தனர், எவ்வாறு திருட்டை மேற்கொண்டனர் என்பதைக் கண்டறிய அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புனித நாளை முன்னிட்டு நடைபெற்ற பிரார்த்தனைக்கு பிறகு இப்படியான சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN