வெள்ளியங்கிரி மலை ஏறிய இளம் மாணவர், நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!
கோவை, 03 ஏப்ரல் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் பீடம்நேரி பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23) என்பவர், தற்போது கோவை பேரூர் அருகே தெலுங்குபாளையத்தில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே வாடகை இல்லத்தில் தங்கி கல
Death


கோவை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் பீடம்நேரி பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23) என்பவர், தற்போது கோவை பேரூர் அருகே தெலுங்குபாளையத்தில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி அருகே வாடகை இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களுடன் ஆன்மிகப் பயணமாக பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் முகேஷ் குமார், அவரது நண்பர்கள் அபி, மகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேருடன் மலையேற்றத்தை தொடங்கியுள்ளனர்.

வழக்கமாக பக்தர்கள் அதிகம் ஏறும் இந்த வெள்ளியங்கிரி மலை, கடினமான ஏற்றமாக இருந்தாலும், ஆன்மிக நம்பிக்கையுடன் பலரும் ஏறி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், இவர்கள் குழுவும் உற்சாகத்துடன் மலையை ஏறி வந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை சுமார் 2 மணியளவில் ஐந்தாவது மலைப்பகுதிக்கு வந்தபோது, முகேஷ் குமார் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலியால் அவதிப்பட்ட அவர் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக நண்பர்கள் அவருக்கு உதவி செய்ய முயன்றும், நிலைமை மோசமடைந்ததால் அவர் அங்கேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மலையில் பணியில் இருந்த டோலி தூக்கும் நபர்கள் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது உடல் மலையிலிருந்து அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகேஷ் குமாரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறும் போது ஏற்பட்ட உயிரிழப்புகளில் இது மூன்றாவது சம்பவமாகும் என்பது கவலைக்கிடமான விடயமாக பார்க்கப்படுகிறது.

மலையேற்றத்திற்கு முன் உடல் நலனை பரிசோதித்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN