Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 03 ஏப்ரல் (ஹி.ச)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது.
எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர்.
அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக கடலில் புனித நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
வழக்கமாக இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) முதல் நேற்று காலை வரை பவுர்ணமி இருந்தது.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கடலில் பாசி படர்ந்த படி பச்சை நிறத்தில் பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர்.
Hindusthan Samachar / vidya.b