நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
திருப்பூர், 03 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 8 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திருப்பூர் யூனியன் ம
NTK Seeman


திருப்பூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 8 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் நேற்று நாம்தமிழர் கட்சி சார்பில் 8 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான், கட்சியின் கொள்கைகள் மற்றும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணிக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியை மீறி சீமான் இரவு 10.20 மணி வரை பிரச்சாரம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக அதிகாரிகள் கருதியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 171(1), 41(6) ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 8 வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவசியம் என தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரச்சார நேரத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN