Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூரில் ஆன்லைன் வர்த்தகம் பெயரில் நடைபெற்ற பெரும் மோசடி சம்பவத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நெய்தல் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சுமன் சாஹா (43) என்பவர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெரிய அளவில் வணிகம் நடத்துவதாக கூறி திருப்பூரில் உள்ள உள்நாட்டு பனியன் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக கூறி, பல கட்டங்களாக ஆர்டர்கள் வைத்து, ஏழு நிறுவனங்களிடமிருந்து மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பிலான பனியன்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பொருட்களை பெற்றுக்கொண்ட பிறகு, அதற்கான பணத்தை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் பல காரணங்களை கூறி பணம் வழங்குவதை தவிர்த்து வந்த அவர், பின்னர் முற்றிலும் தொடர்பை துண்டித்து தலைமறைவாகி விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த பனியன் உற்பத்தியாளர்கள், தாங்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்ததாக கூறி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சுமன் சாஹாவை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர். அவரின் மொபைல் தகவல்கள் மற்றும் வணிக தொடர்புகளை ஆய்வு செய்ததில், அவர் மும்பையில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, போலீசார் சிறப்பு குழுவை அமைத்து மும்பைக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த சுமன் சாஹாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருப்பூருக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திட்டமிட்ட முறையில் பல நிறுவனங்களை ஏமாற்றி பொருட்களை பெற்றுக்கொண்டது உறுதியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுமன் சாஹாவை திருப்பூர் மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN