Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)
உலகளவில் மிகவும் கொடூரமான சட்டங்களில் ஒன்றாக கருதப்படும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மாயக்காள் உட்பட 17 பேர், பிறப்பின் அடிப்படையில் மக்களை குற்றவாளிகளாகக் குறிக்கும் இந்த மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக வீரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆங்கிலேய ஆட்சி படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக வரலாற்றில் முக்கியமான விடுதலைப் போராட்ட நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தியாகிகளை நினைவுகூர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி நினைவேந்தல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பிறப்பின் அடிப்படையில் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்த இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய பெருங்காமநல்லூர் தியாகிகளின் துணிச்சலும் தியாகமும் என்றும் மறக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களின் தியாகத்தை எந்நாளும் நினைவில் கொண்டு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க அனைவரும் உறுதிபூண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நினைவு நாள், சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் தியாகத்தை நினைவூட்டுவதோடு, சமூக சமத்துவம் மற்றும் மனித கண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ