சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - போக்குவரத்து நெரிசல்
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) சித்ரா பௌர்ணமி மற்றும் மே தினத் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட
Traffic


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

சித்ரா பௌர்ணமி மற்றும் மே தினத் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

தமிழகத்தில் நாளை சித்ரா பௌர்ணமி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதேசமயம், நாளை மே 1 தொழிலாளர் தினம் என்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என அடுத்தடுத்த விடுமுறை நாட்கள் வருவதால், சென்னையில் தங்கிப் பணிபுரியும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் உள்ள புகழ்பெற்ற இரணியம்மன் கோவிலில், வெளியூர் செல்லும் பொதுமக்கள் திரண்டு தங்களது வாகனங்களுக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.

மேலும் வாகனங்களுக்குப் பூஜை செய்துவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது வழக்கம் என்பதால், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களின் வருகை இன்று காலை முதலே அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தத் தொடர் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமி கூட்ட நெரிசல் காரணமாக

தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர்

உள்ளிட்ட ஜி.எஸ்.டி சாலைப் பகுதிகளில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளியூர் செல்லும் பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

போக்குவரத்தைச் சீர்செய்யப் போதிய காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருப்பதால், வாகனங்கள் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்கின்றன. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாலை நேரத்திற்குப் பிறகு இந்த வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவோ அல்லது திட்டமிட்டுப் பயணத்தைத் தொடங்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN