Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் இன்று வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்கு எண்ணும் நடைமுறைகள் குறித்து விளக்கங்கள் பெறுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) கையாளும் முறை, தபால் வாக்குகள் எண்ணும் செயல்முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சட்டம்-ஒழுங்கை பேணுவது, வேட்பாளர் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, சந்தேக நிலைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றையும் அதிகாரிகள் விளக்குகின்றனர்.
சென்னையில் வாக்கு எண்ணும் பணிகள் மூன்று முக்கிய இடங்களில் நடைபெற உள்ளன. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை நாளில் எந்த வித தடங்கலும் இல்லாமல் பணிகளை சீராக மேற்கொள்ள இந்த பயிற்சி முக்கிய பங்காற்றும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ