Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில், கார்த்திகை தீபத்திற்கு அடுத்தபடியாக அதிக கூட்டம் திரளும் விழாவாக சித்ரா பௌர்ணமி கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, பணிகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் கிரிவலப் பாதை பகுதிகளில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 16 தற்காலிக பேருந்து நிலையங்கள், 90 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய பைபாஸ் ரிங் ரோடு பகுதிகளில் டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு மொத்தம் 4200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam