Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
உழைக்கும் மக்களின் ஒற்றுமையையும் உழைப்பின் பெருமையையும் உலகறியச் செய்யும் தொழிலாளர் தினமான ‘மே’ தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம், பல நூற்றாண்டுகளாக போராடி தங்களின் உரிமைகளை மீட்டெடுத்த தினமே ‘மே’ தினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி! உருக்குப்போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி!” என்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வரிகளை மேற்கோள் காட்டி, தொழிலாளர்களின் உயர்வையும் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொழிலாளர்கள் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் தங்கள் ஆட்சிக் காலங்களில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியதாக நினைவுகூர்ந்தார்.
அவர்களைத் தொடர்ந்து தாம் தலைமையேற்ற ஆட்சியிலும் தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதை பெருமையுடன் நினைவுகூருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உழைப்பே மனிதனை உயர்த்தும், உழைப்பின் பயன் வாழ்க்கையில் மனநிறைவை அளிக்கும், நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை எடுத்துரைத்த எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது இதயப்பூர்வமான ‘மே’ தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ