Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9175 தொழில்நுட்பம் மற்றும் டிரேட்ஸ்மேன் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுடைய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு விதிமுறைகளின்படி, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும் மே 19, 2026 இறுதி நாளாகும். பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினர் மற்றும் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் rect.crpf.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், இந்திய இராணுவம் மற்றும் சீருடைப் பணியிகளில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்க 'வெற்றிநடை' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கட்டணமில்லா வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சி.ஆர்.பி.எப் காவலர் பணிக்குச் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த இலவசப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
பயிற்சி மையங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99525 94351 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
என அம்மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b