Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 30 ஏப்ரல் (ஹி.ச.)
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று மாலையில் பெருமாள் உபயநாச்சியார்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதி புறப்பாடு செய்தார்.
வியாழக்கிழமை, பெருமாள் சக்கரபாணி சுவாமியுடன் விஜயேந்திர மடத்தில் எழுந்தருளினார். மாலையில் வெள்ளி சூர்யபிரபையில் புறப்பாடு நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை, வெள்ளிப்பல்லக்கில் வீதிபுறப்பாடும், இரவில் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான இரட்டை ஓலைச்சப்பரம் (பனை, தென்னை ஓலைகளால் செய்யப்பட்டது) சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலையில் பெருமாள் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளினார்.
பகலில் நூற்றுக்கால் மண்டபத்தில் திருவடி திருமஞ்சனம் நடைபெற்றது.
இரவு இரட்டை ஓலைச்சப்பரத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி பெருமாள்கள் கருடவாகனங்களில் தனித்தனியாக எழுந்தருளினர். ஓலைச்சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.
பக்தர்கள் பெருமாளை இரட்டை கருட சேவையில் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வுகளாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இரவு தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
சித்திரைப் பெரிய தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்னர் 450 டன் இருக்கும்.
தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்று விட்டம் 28 அடியும் உடையது.
தேர் அலங்காரத்துக்கு பின் ஒட்டுமொத்த உயரம் 110 அடியை எட்டி, இந்தத் தேர் ஆடி அசைந்து வந்தது தனி அழகுதான்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P