விளங்காடுபாக்கம் தர்காஸ் பகுதியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர், 30 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள விளங்காடுபாக்கம் தர்காஸ் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த தீ விபத்தில் பரந்தாமன் (
Death


திருவள்ளூர், 30 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள விளங்காடுபாக்கம் தர்காஸ் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த தீ விபத்தில் பரந்தாமன் (56) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பரந்தாமன் தனது மனைவி செல்வி மற்றும் பிள்ளைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். சம்பவம் நடந்த நேரத்தில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும், பரந்தாமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. நள்ளிரவில் அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் தீப்பற்றி பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ வேகமாக பரவியதால், அங்கு இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பில் பரந்தாமன் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாகி முற்றிலும் சேதமடைந்துள்ளன. அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், சமீபத்தில் புதிய கேஸ் சிலிண்டர் வாங்கப்பட்டிருந்ததாகவும், மின் கசிவு காரணமாக தீப்பற்றி அதன் பின்னர் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவரை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN