Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
குமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நந்துமாருதி டூர்ஸ் & டிராவல்ஸ் உள்ளிட்ட சில தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் ‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற பெயரில் சட்ட விரோதமாக உள்ளூர் சுற்றுலாவிற்கு 200 ரூபாயும், கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலாவிற்கு 750 ரூபாயும் வசூலிக்கின்றனர்.
ஓட்டுநர் உட்பட 13 நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி பெற்ற வாகனங்களில் 25 முதல் 30 பயணிகளை ஏற்றி, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கென தனி நபர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிரானது.
ஒப்பந்த வாகனங்கள் தனிநபர் கட்டணத்தை வசூலிக்க முடியாது.
இவர்களுடைய இந்த செயல்களால் அரசுக்கும், சிறு அளவிலான போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே குமரி மாவட்டத்தில் ‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற பெயரில் ஒப்பந்த வாகனங்கள் தனி நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அவ்வாறு செயல்படும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்றால், வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, வழக்கு தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர், குமரி மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்களை பொறுத்தவரை, ‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்பது பயணத்துடன், தங்குமிடம், உணவு போன்ற அனைத்தையும் அந்தந்த நிறுவனங்களே ஏற்பாடு செய்து கொடுக்கும்.
இதற்காக, போக்குவரத்து கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பல நிறுவனங்கள் பண்டிகைகள் மற்றும் சீசன்களுக்கு ஏற்ப சலுகைகளையும் வழங்குகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN