3வது பிரசவத்திற்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டிய நிலையில் 12 வாரம் மட்டுமே விடுப்பு என்ற அரசாணையை ஏற்க முடியாது- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா, 3வது பிரசவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை பேறு கால விடுப்பு வழங்க கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிட
உயர்நீதிமன்றம்


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா, 3வது பிரசவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை பேறு கால விடுப்பு வழங்க கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் விண்ணப்பித்திருந்தார்.

இதை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிபதி, ஏப்ரல் மாதத்துக்குள் மீண்டும் பணியில் சேருமாறு கடந்த மார்ச் இறுதியில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து 2027 பிப்ரவரி வரை தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு உத்தரவிட்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சாயி நிஷா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.செந்தில்குமார் ஆகியோர், 3வது பிரசவத்துக்கு முழு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளன.

அதன் அடிப்படையில், சாயி நிஷாவுக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து ஒரு வாரத்தில் மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 3வது பிரசவத்துக்கு 12 வாரங்களுக்கு விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அதை ஏற்க முடியாது. 3வது பிரசவத்திலும் அதே வலியை பெண்கள் அனுபவிப்பதால் இந்த விஷயத்தில் எந்த பாரபட்சமும் காட்ட முடியாது. அரசின் இந்த அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது என்று உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P