Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச)
சென்னையில், அதிமுக ஆட்சிக் கால சுகாதாரத்துறை அமைச்சரின் பெயரை கூறி செவிலியர்களிடம் பணம் மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் டிரைவராக பணியாற்றி வருவதாக கூறிய சோமசுந்தரம் என்பவர், பல செவிலியர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் அளித்த புகாரில், சோமசுந்தரம் தன்னை முன்னாள் அமைச்சரின் உதவியாளரின் வாகன ஓட்டுநராக அறிமுகப்படுத்தி, வேலை மற்றும் பிற உதவிகள் செய்து தருவதாக கூறி, தன்னிடமும் தனது நண்பர்களிடமும் சேர்த்து ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், எந்த உதவியும் செய்யாமல் பணத்தை திருப்பி தராமல் தவிர்த்ததுடன், பணம் கேட்டபோது அநாகரிகமாக பேசியதோடு, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தவறாக வெளியிடுவதாகவும், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமசுந்தரம் உண்மையில் முன்னாள் அமைச்சரின் உதவியாளரிடம் டிரைவராக இருந்தாரா அல்லது மோசடிக்காக பொய்யாக கூறியாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ