Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி ,30 ஏப்ரல் (ஹி.ச.)
டெல்லி ஐகோர்ட்டில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துவது வழக்கம்.
அப்போது,நடைபெற்ற அமர்வில் சுமார் 180 வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தன.
அப்போது, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஒரு வழக்கை விசாரித்து கொண்டிருந்தனர்.
வழக்கில் தொடர்புடையவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைந்து வாதங்களையும் சாட்சியங்களையும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திடீரென கணினி திரையில் சத்தமான இசையுடன் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பாக தொடங்கின.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கணினி இணைப்பை துண்டித்தனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டபோதும், மறுமுறையும் ஆபாச காட்சிகள் தோன்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து “உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது” என்ற எச்சரிக்கை குறிப்பு திரையில் தோன்றியதால் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், அமெரிக்காவில் இருந்து இணைப்பை முடக்கியதாகவும், மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டாம் என்றும் ஹேக்கர் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சைபர் தாக்குதலால் டெல்லி ஐகோர்ட்டின் காணொலி வழக்கு விசாரணை நடவடிக்கைகள் சில நேரம் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து கோர்ட்டு நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசாரும், சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நீதிமன்ற அமர்வில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் தனது திரையை பகிர்ந்து ஆபாச உள்ளடக்கத்தை இயக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
“ஸ்ரீதர் சர்னோபத்”, “ஷித்ஜீத் சிங்” ஆகிய பெயர்களில் சில கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் மூலம் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் காணொலி வாயிலாக நீதிமன்ற விசாரணைகள் அதிகரித்து வரும் சூழலில், டெல்லி ஐகோர்ட்டில் நடந்த இந்த சைபர் தாக்குதல் நீதிமன்றங்களின் இணைய பாதுகாப்பு தொடர்பாக புதிய அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த கோர்ட்டு நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA