Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 30 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ளவிவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், விவேகானந்தன் சிறையில் இருந்தபோதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கருணா @ கருனாஸ் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. நீண்டநாள் விசாரணைக்கு பிறகு, இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது என்பதால் அனைவரின் கவனமும் புதுச்சேரி நீதிமன்றத்தை நோக்கி திரும்பியுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட உள்ள நாளை முன்னிட்டு, சிறையில் இருந்து கருணா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், தீர்ப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கைகளையும் வலுப்படுத்தியது. இன்று வெளியாக உள்ள தீர்ப்பு, இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN