Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 30 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரி–தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத மதுபான கடத்தலைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடலூர் அருகே உள்ள ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் விரிவான வாகன சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்குள் அனுமதியின்றி மதுபானங்கள் மற்றும் சாராயங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஆல்பேட்டை, சாவடி, மருதாடு உள்ளிட்ட முக்கிய நுழைவுப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு சோதனையின் போது இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.
வாகனங்களில் மறைத்து கொண்டு வரப்பட்ட மதுபானங்கள் மற்றும் சாராயப் பாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் அங்கேயே கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
இது கடத்தலுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்துவருவதை வெளிப்படுத்துகிறது.
மேலும், உரிய ஆவணங்கள் இன்றி மதுபானங்களை கொண்டு வந்தவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும், இதுபோன்ற வாகன சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam