Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 30 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான கே.கே. ஆனந்த் மோகன், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆனந்த் மோகன் கூறியதாவது,
பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியானாலும் அவற்றைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மே 4-ஆம் தேதி தனிப்பெரும்பான்மையுடன் விஜய் ஆட்சி அமைப்பார்.
பத்தில் ஏழு பேர் தவெக-வின் விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர், இது கட்சிக்கும், தலைவர் தளபதி விஜய்கும் மக்கள் அளித்துள்ள பேராதரவை காட்டுகிறது.
விஜய் ஆட்சி அமைப்பது உறுதி என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மக்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. விஜய் சென்னையில் கூட்டியுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சி வேட்பாளர்கள் சென்று கொண்டிருகின்றனர்.
“நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்”
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு கருத்துக்கணிப்புகள் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, முதல் தேர்தலைச் சந்திக்கும் தவெக 98 முதல் 120 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனவும், திமுக கூட்டணி 92 முதல் 100 தொகுதிகளும், பாஜக தலைமையிலான 5 கட்சி கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த முதலமைச்சராக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினை விட விஜய்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், 35 சதவீத ஆதரவு ஸ்டாலினுக்கும், 37 சதவீத ஆதரவு விஜய்க்கும் உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மற்ற கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கணித்துள்ளன. பீப்பிள் பல்ஸ் கணிப்பின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளும், பாஜக உள்ளிட்ட அதிமுக கூட்டணி 65-80 தொகுதிகளும், தவெக 2 முதல் 6 தொகுதிகளும் வெல்லும். மேட்ரிஸ் கணிப்பு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 122-132 தொகுதிகள், அதிமுக கூட்டணிக்கு 80-100 தொகுதிகள், தவெக-வுக்கு 0-6 தொகுதிகள் எனத் தெரிவிக்கிறது.
பி-மார்க் கணிப்பில் திமுக கூட்டணி 125-145, அதிமுக கூட்டணி 60-70, தவெக 1-6 தொகுதிகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள் இன்சைட் கணிப்பில் திமுக கூட்டணி 120-140, அதிமுக கூட்டணி 60-70, தவெக 30-40 தொகுதிகள் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b