Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந் தேதி அமைதியாக நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் சென்னை கோட்டையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து, எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) மற்றும் தமிழக காவல்துறையினரை இணைத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதுடன், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அத்துடன், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைவோர் அனைவரும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாத எவரையும் எந்த காரணத்திற்கும் மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி சான்றிதழ் வழங்கப்படும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் எவ்வித தளர்வும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA