Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
விருத்தாசலம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர், புதுச்சேரியில் இருந்து 1.680 லிட்டர் மதுபானம் கொண்டு வந்தபோது கடலூர் மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், தனிப்பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்கலாம் என்ற விதியை சுட்டிக்காட்டி, அவர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்திருந்தார்.
இதையடுத்து, “புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 4.5 லிட்டர் வரை மதுபானம் கொண்டு வரலாம்” என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த சூழலில், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர், ஆந்திராவில் இருந்து 3.4 லிட்டர் மதுபானம் கொண்டு வந்ததாக தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் முதலில் இடைக்கால தடை வழங்கியிருந்தது. பின்னர் இறுதி விசாரணையில், மனுதாரர் தரப்பில் 4.5 லிட்டர் வரை தனிப்பயன்பாட்டிற்காக மதுபானம் வைத்திருக்கலாம் என்ற முன்தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 4.5 லிட்டர் சலுகை என்பது தமிழ்நாட்டில் சட்டப்படி விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு அது பொருந்தாது என்றும் விளக்கமளித்தார்.
இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி நிர்மல்குமார், “4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்கலாம் என்ற விதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் சட்டப்பூர்வ மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று தெளிவுபடுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவு (90 மில்லி) மட்டுமே மதுபானம் கொண்டு வர முடியும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ