திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம்- கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை
திருவண்ணாமலை, 30 ஏப்ரல் (ஹி.ச.) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்
க


திருவண்ணாமலை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இன்று, ஏப்ரல் 30 காலை 8 மணி முதல், மே 2ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சித்ரா பௌர்ணமி நாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதை பகுதியில் திரளவுள்ளதால், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கிரிவலப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதனை தவிர்க்கவும், பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

சரக்கு லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் திருவண்ணாமலை நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.

அவை மாற்று வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, செங்கம், போளூர், கலசப்பாக்கம், களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

முக்கிய சந்திப்புகளில் கூடுதல் காவல்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, அவசர சேவை, சுகாதார வசதிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P