பிரதமர் மோடி தலைமையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் தொடக்கம்
சென்னை, 04 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிரமாகப் பணியாற்றி
Tamil Nadu BJP Core Committee


சென்னை, 04 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி தலா இரு தொகுதிகள் என 30 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டு, பிரச்சாரமும் உடனடியாகத் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக சார்பில் புதுச்சேரியில் நடந்த ‘ரோடு ஷோ’வில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச் சேரிக்கு வந்தார்.

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று இரவு சென்னையில் தங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 4) காலை சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மையக்குழுவைச் சேர்ந்த 18 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பியூஷ் கோயல், எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களும் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b