திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிமனையில், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு வாரத
Aadhav


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிமனையில், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒரு வாரத்திற்கு முன்பு திருமாவளவன் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசியிருந்தார். மாநில அரசியலுக்கு மக்களுக்காக வருவேன் என்றும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக)யை வலுப்படுத்தப் போவதாகவும் கூறினார்.

ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், போட்டியிட வேண்டிய தொகுதியை திருமாவளவனிடம் கேட்காமல், நேரடியாக திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிடம் கேட்டிருப்பது கவலைக்குரியது. இதுகுறித்து திருமாவளவனுக்கே தெரியாத நிலை உருவாகியுள்ளது.

நேற்று இரவு, காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடவில்லை என திருமாவளவன் தெரிவித்தார். அவருக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. செய்தியாளர் சந்திப்பில் கூட, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அந்த அளவுக்கு ஆசைப்பட்ட ஒருவரை போட்டியிட விடாமல் தடுத்துள்ளது திமுக.

ஜனநாயகத்திற்கு எதிராக கூட்டணி கட்சிகளை ஒடுக்குவது போல திமுக செயல்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் மாறும் என திருமாவளவன் முன்பு கூறியிருந்தார். ஒரு மூத்த அரசியல் தலைவராக, எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற அவரின் கனவு மிகப்பெரியது.

பாஜக ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே அவர் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. ஆனால், திருமாவளவனின் அந்த ஆசை நான்கு, ஐந்து நாட்களில் ஏன் மாறியது? தமிழகத்தில் அரசியல் களம் திறந்து கிடக்கிறது. திருமாவளவன் போன்ற தலைவர் எம்எல்ஏவாக வருவதில் என்ன தவறு? அவர் எவ்வளவு ஆசைப்பட்டார் என்பதை விசிக தொண்டர்கள் நன்கு அறிவார்கள்” என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ