Enter your Email Address to subscribe to our newsletters

சிம்லா, 05 ஏப்ரல் (ஹி.ச.)
இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள சோஜா அருகே, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று நேற்று இரவு சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், குறைந்தது நால்வர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
பஞ்சார் காவல் நிலையத் தகவலின்படி, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் இரவு சுமார் 8.30 மணியளவில் சோஜா அருகே பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது.
காயமடைந்த ஆறு முதல் ஏழு பேர் வரை ‘108’ ஆம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் உடனடியாக பஞ்சார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளையில், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் விபத்து இடத்தில் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் சுமார் 20 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பஞ்சார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், வாகனத்தில் இருந்த அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், இவர்களின் முன்பதிவுகள் டெல்லியிலிருந்து செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM