வேங்கைவயல் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு- திமுக மீது அன்புமணி இராமதாஸ் கடும் குற்றச்சாட்டு
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இடம்பெற்ற குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்காததை கண்டித்து, அப்பகுதி பட்டியலின மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பது பெரும
Anbumani


Tw


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இடம்பெற்ற குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்காததை கண்டித்து, அப்பகுதி பட்டியலின மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அன்புமணி இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி திமுக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து,அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

வேங்கைவயல் சம்பவம் 26.12.2022 அன்று நடந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

தொடக்க இரண்டு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததையும், பின்னர் 2025 ஜனவரியில் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதிக்கு எதிராகவே வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற கடுமையான முடிவை எடுத்துள்ளதாகவும், இதற்கு முன் மக்களவைத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்குப் பிறகாவது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது திமுக அரசின் அலட்சியத்தையும் அகங்காரத்தையும் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர பட்டியலின மக்கள் முக்கிய பங்காற்றியிருந்தாலும், அவர்களுக்கான நலன்களில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அரசுத்துறைகளில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்கள், மாணவர் விடுதிகளுக்கான நிதி பற்றாக்குறை, அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பல சமூக அநீதிகளை அவர் பட்டியலிட்டார்.

பட்டியலின மக்களுக்கு எதிரான இந்த அநீதிகளுக்கு எதிராக பாமக மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், திமுக கூட்டணிக் கட்சிகள் இதுவரை அமைதியாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார். இந்த சூழ்நிலையில், பட்டியலின மக்களின் ஆதரவை இழக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக, பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் வந்து, அவர்களை புறக்கணிக்கும் திமுகவின் அரசியல் துரோகம் மன்னிக்க முடியாதது என்றும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ