Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 05 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரைப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவ மாரியம்மன் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
இதனையடுத்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு இன்று காலை 8 மணி அளவில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது.
விழாவில் தொடர்ந்து நாளை (ஏப்ரல் 6ம் தேதி) மரசிம்ம வாகனம், ஏப்ரல் 7ம் தேதி மரபூத வாகனம், ஏப்ரல் 8ம் தேதி மர அன்னபக்ஷி வாகனம்,ஏப்ரல் 9ம் தேதி மர ரிஷப வாகனம், ஏப்ரல் 10ம் தேதி மர யானை வாகனம், ஏப்ரல் 11 ம் தேதி மரசேஷ வாகனம், ஏப்ரல் 12ம் தேதி மரக்குதிரை வாகனம், ஏப்ரல் 13 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகன ஊர்வலமும் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 14ம் தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், நடைபெற உள்ளது.
மேலும் ஏப்ரல் 15 ம் தேதி வெள்ளிக்காமதேனுவாகனம், ஏப்ரல் 16ம் தேதி புஷ்ப பல்லக்கு, ஏப்ரல் 17ம் தேதி தெப்பத் திருவிழாவும், தேர் முடிந்த எட்டாம் திருநாள் ஏப்ரல் 21ம் தேதி தங்க கமலவாகனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாரயணன், மணியக்காரர் பழனி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b