எம்.பி சீட் தருவதாகக் கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை, 05 ஏப்ரல் (ஹி.ச.) தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவண்ணாமலையில் இன்று (05.04.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கடந்த 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது கூட்டணியில் சேர்ந்தால்
எம்.பி சீட் தருவதாகக் கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு


திருவண்ணாமலை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவண்ணாமலையில் இன்று (05.04.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கடந்த 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று பிரேமலதா குற்றம் சாட்டினார்.

அதோடு கூட்டணியில் ஒதுக்கீடு ஒப்பந்தத்தைச் செய்தியாளர்களிடம் காண்பித்துப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

இவ்வாறு பேசுவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு அழகல்ல. இது நிச்சயமாகக் கண்டிக்கக்கூடிய ஒரு விஷயம். அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இதுவரைக்கும் நான் யாரிடமும் காண்பித்ததே கிடையாது. எம்.பி. சீட்டுக்கு அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது உண்மை. ‘நான் எங்கே போட்டுக் கொடுத்தேன்?.

நான் எங்கே சொன்னேன்?” என்று கூறுகிறார் அரசியலில் மரியாதை காரணமாகக் கண்ணியத்தைக் கடைப்பிடித்து அதை நான் இதுவரைக்கும் காண்பிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு அதைக் காட்ட வேண்டிய ஒரு நிலைக்கு என்னை அவர்தான் கொண்டு போகிறார். ஐந்து எம்.பி.யும், ஒரு ராஜ்யசபாவும் தரப்படும் என்பதை 2024இல் அவர் ஒரு பக்கமும், நான் ஒரு பக்கமும் கையெழுத்துப் போட்டிருக்கிறோம்.

அப்படி என்றால் 2025இல் அவர் ராஜ்யசபா சீட் கொடுத்து இருக்க வேண்டும். வருடம் போடாமல் கொடுக்கிறீர்களே வருடம் போட்டுக் கொடுங்கள் என்று நான் சொல்லும்போது, ‘எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து வருடம் போடுவது இல்லமா. என்னுடைய வார்த்தைதான் முக்கியம். இதெல்லாம் சும்மா ஒரு பேப்பர். என் வார்த்தைதான் முக்கியம். அதை நம்புங்கள்’ என்ற அவர் அந்த சொன்ன அந்த வார்த்தையை நாங்கள் நம்பினோம். ஆனால் அவர் நம்பிக்கைக்குப் புறம்பாக இன்றைக்கு ஏதேதோ பேசிவிட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், பிரேமலதா விஜயகாந்த்தும் 20.03.2024 அன்று கையெழுத்திட்ட கூட்டணி ஒப்பந்தத்தில் தெரிவித்திருப்பதாவது,

2024, நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் உடன்படிக்கை :

19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் கூட்டணி அமைந்து தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலைச் சந்திப்பது என, இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கும் இடையே இன்று (20.03.2024-புதன் கிழமை) ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இக்கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு 5 (ஐந்து) நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b