Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 05 ஏப்ரல் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த முறை ஒரு தொகுதியை தவறவிட்டோம்.
ஆனால் இந்த முறை விராலிமலை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த தொகுதி மிகவும் முக்கியமானது.
“குட்கா” விவகாரத்தில் புகழ்பெற்ற விஜயபாஸ்கர் இந்த முறை வெற்றி பெறக் கூடாது. திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
விராலிமலை தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த முறையும் “2.0” திராவிட ஆட்சி அமைக்கப்படும். திருநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் நலத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நிறுத்த முயன்றன.
“2.0” ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 வழங்கப்படும். மேலும் 10 லட்சம் கலைஞர் இல்லங்கள் கட்டி தரப்படும். ரூ.8000 கூப்பன் வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் தொடர வேண்டுமெனில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. அதிமுகவும் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிசாமி குறித்து விமர்சித்த அவர், அவருக்கு “மொரட்டு மோடி அடிமை” என்று செல்லப்பெயர் வைத்துள்ளேன் என்றார்.
அத்துடன் வி. கே. சசிகலா தொடர்பான புகைப்படத்தை காட்டி கூட்டத்தில் சிரிப்பு அலையையும் ஏற்படுத்தினார்.
இறுதியாக, செல்லப்பாண்டியனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். விஜயபாஸ்கருக்கு வாக்களித்தால் அவர் குவாரி தொழிலில் மட்டுமே ஈடுபட்டு மக்களை கவனிக்க மாட்டார். எனவே திமுக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam