Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சை மாவட்டத்தில் பெருமைமிக்க பேராலயமாக திகழும் பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி தொடங்கியது. பேராலயத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.
கோவிலின் முகப்பில் புது நெருப்பு மந்திரிக்கப்பட்டு பேராலய அதிபர் சாம்சன் பெரிய பாஸ்கா மெழுகுவர்த்தியில் சிலுவை அடையாளம் வரைந்தார்.
மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பெரிய பாஸ்கா மெழுகுவர்த்தியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' வையும் , கடைசி எழுத்தான 'ன' வையும் எழுதினார்.
ஆண்டவருடைய ஆண்டு இது என்பதை குறிக்க 2026 என்பதை குறித்து, பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஐந்து மணிகளை பதித்தார். அதன் பின்னர் பாஸ்கா மெழுகுவர்த்தியை புனிதம் செய்து அதில் ஒளி ஏற்றி கைகளை உயர்த்தி பிடித்து ‘இயேசுவின் ஒளி இதோ’ என உரக்க பாடினார். பின்னர் அந்த மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி வந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த இறை மக்கள் இறைவா உமக்கு நன்றி என்று குரல் எழுப்பி வழிபட்டனர். மேலும், பாஸ்கா மெழுகுவர்த்தியில் இருந்து தங்கள் கைகளில் இருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டனர்.
பின்னர் பாஸ்கா மெழுகுவர்த்தி, பீடத்தின் அருகில் இருந்த அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டு ஈஸ்டர் தின திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செல்வகுமார், அருள் லாரன்ஸ், ஆன்மீகத் தந்தை ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு பூண்டி மாதா பேராலயம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழை பெய்த போதும் ஏராளமான மக்கள் பூண்டி மாதா ஆலயத்தில் குழுமி ஈஸ்டர் தின திருப்பலியில் கலந்து கொண்டனர். இன்று நாள் முழுவதும் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b