ராமநாதபுரத்தில் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
ராமநாதபுரம், 05 ஏப்ரல் (ஹி.ச.) உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 46 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தி
ராமநாதபுரத்தில் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி


ராமநாதபுரம், 05 ஏப்ரல் (ஹி.ச.)

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 46 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நள்ளிரவு முதலே ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை தத்ரூபமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயிர்த்தெழும் நிகழ்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தவக்காலத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலிக்கு பங்குத்தந்தை ரெமிஜியஸ், அருட்தந்தை பிரிட்டோ தலைமை ஏற்று நடத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை அருள் சகோதரர் சார்லஸ் சகோதரிகள் செல்வம், ஞான சுகந்தா, அமலோற்பவம் கோயில் பிள்ளை ஆண்டனி ரோமியோ ஆகியோர் செய்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மக்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

இதேபோல் சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை செல்வக்குமார், உதவி பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

தொண்டி புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி கொண்டாடப்பட்டது.

குருமிலாங்குடி புனித சுவக்கின் அன்னாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா தலைமையில் சிவகங்கை மறை மாவட்டத்தைச்சேர்ந்த எட்வர்ட் ராஜ் முன்னிலையில் உயிர்ப்புப் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Hindusthan Samachar / vidya.b