Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 05 ஏப்ரல் (ஹி.ச.)
வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 04- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30- ஆம் தேதி தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு நாளை (ஏப்ரல் 06) கடைசி நாள் என்பதால், தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு (தனி), சங்ககிரி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி), எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, மேட்டூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
சேலம் மேற்கு தொகுதியில் திமுக கூட்டணியின் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கார்த்தி, தற்போதைய ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சேலம் மேற்கு தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 99 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கெங்கவல்லி (தனி) தொகுதியில் 5 பேரும், ஆத்தூர் (தனி) தொகுதியில் 7 பேரும், ஏற்காடு (தனி) தொகுதியில் 7 பேரும், ஓமலூர் தொகுதியில் 11 பேரும், மேட்டூர் தொகுதியில் 3 பேரும், எடப்பாடி தொகுதியில் 8 பேரும், சங்ககிரி தொகுதியில் 5 பேரும், சேலம் மேற்கு தொகுதியில் 19 பேரும், சேலம் வடக்கு தொகுதியில் 11 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் 13 பேரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று ஒரே நாளில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே சேலம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN