ஆவடியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.12.26 லட்சம் பணம் பறிமுதல்
திருவள்ளூர், 05 ஏப்ரல் (ஹி.ச.) 2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்
Money Seizure


திருவள்ளூர், 05 ஏப்ரல் (ஹி.ச.)

2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, ரூ.50,000 வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, ஆவடி சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நடுக்குத்தகை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஹேமச்சந்திரன் என்பவரிடம், ரூ.9,31,400 பணம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, ஆவடி அருகே பாலவேடு ஏரிக்கரை சாலையில் நடந்த வாகன சோதனையில், சிறிய வகை சரக்கு வாகனத்தில் வந்த ராஜேஷ் குமார் என்பவரிடம் ரூ.84,876 பணம் இருந்தது தெரியவந்தது. அவரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், நெமிலிச்சேரி செக்போஸ்ட் அருகே சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, கணேசமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,02,029 எடுத்து சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆவடி செக்போஸ்ட் பகுதியில் சொகுசு காரில் வந்த ஜான் என்பவரிடமிருந்து ரூ.1.08 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இப்படி பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் மொத்தமாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12.26 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம், அடுத்தகட்ட விசாரணைக்காக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN